பெண் போலீஸ் மீது தாக்குதல்


பெண் போலீஸ் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 25 Feb 2018 4:30 AM IST (Updated: 25 Feb 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலத்தில் இருதரப்பினர் இடையே தகராறின்போது அவர்களை தடுக்க சென்ற பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (வயது 39). கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவர், அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பால்மலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (29). இவரது மனைவி மீனா (25). இவர்கள் இருவரும் வெள்ளாளப்பட்டி பகுதியில் சாந்தி வேலை செய்து வந்த செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்தனர்.

அப்போது, செல்வத்திற்கும், சாந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே, சாந்தியிடம் செல்வம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தை சாந்தி திருப்பி கேட்டதால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில், மேச்சேரி அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு நேற்று செல்வம், அவரது மனைவி மீனா, இவரது சகோதரர் கணேசன் ஆகியோர் வேனில் வந்தனர். பின்னர், அவர்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு திருச்செங்கோட்டிற்கு வேனில் புறப்பட்டனர். அதேசமயம், சாந்தியும் திருச்செங்கோட்டிற்கு புறப்பட்டு வருவதாக மீனாவிற்கு தகவல் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது, தாரமங்கலம் போலீஸ் நிலையம் அருகே அவர்கள் வந்தபோது, சாந்தி அந்த வேனை மறித்து தகராறில் ஈடுபட்டார். சாந்தியும், மீனாவும் ஒருவரை ஒருவரை தாக்கி சண்டையிட்டு கொண்டனர். அந்த சமயத்தில் போலீஸ் நிலையம் அருகில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதை அறிந்த பெண் போலீஸ் கோகிலா என்பவர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை தடுத்து விலக்கிவிட முயன்றார்.

அப்போது, கோகிலா போலீஸ் உடையில் இல்லாமல் சுடிதாரில் இருந்ததால் போலீஸ் என தெரியாமல் கணேசன் அவரை சரமாரியாக தாக்கினார். இதை அறிந்த மற்றவர்கள், பெண் போலீசை அடித்துவிட்டாயே? என கணேசனை தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றனர். அதன்பிறகு நடந்த சம்பவத்திற்கு கணேசன், பெண் போலீஸ் கோகிலாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தாரமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story