ரியல் எஸ்டேட் அதிபரிடம் அரசியல் பிரமுகர் பெயரை கூறி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 7 பேர் கைது


ரியல் எஸ்டேட் அதிபரிடம் அரசியல் பிரமுகர் பெயரை கூறி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2018 3:45 AM IST (Updated: 25 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் அரசியல் பிரமுகர் பெயரை கூறி ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி– கரூர் புறவழிச்சாலை அருகே உள்ள வி.என்.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 36). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய அலுவலகம் தில்லை நகர் 10–வது கிராசில் உள்ளது. இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மற்றும் பெரியகுளத்தை சேர்ந்த முகுந்தன், செல்வகணேஷ், செல்வம், இளங்கோ, பிரேம்ஆனந்த், யுவராஜா, ஹரிகரன் ஆகிய 7 பேர் ஒரு காரில் சென்று அரசியல் பிரமுகர் ஒருவர் பெயரை கூறி, அரசு திட்டங்களை செயல்படுத்த பணம் இல்லை என்றும் உங்களிடம் ரூ.1 கோடி பணம் வாங்கி வரச்சொல்லி உள்ளார் என்றும் கூறி உள்ளனர்.

இதை நம்பிய அவர் தன்னிடம் தற்போது அவ்வளவு பணம் இல்லை என்று கூறி அவரிடம் இருந்த ரூ.1½ லட்சத்தை கொடுத்து உள்ளார். இதை பெற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே 7 பேரும் ஒரு காரில் தில்லைநகரில் உள்ள அலுவலகத்திற்கு வந்து அதே அரசியல் பிரமுகர் பெயரை கூறி ரூ.1 கோடி பணம் பெற்று வரச்சொன்னார் என்று கூறி உள்ளனர். அப்போது அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

பணம் பறிக்க திட்டம்


இதனால் சந்தேகம் அடைந்த அவர், அவர்கள் குறிப்பிட்ட அரசியல் பிரமுகரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு இது குறித்துகேட்டு உள்ளார். அதற்கு அவர் அப்படி யாரிடமும் பணம் வாங்கி வரக்கூறவில்லை என்று கூறி உள்ளார். பின்னர் கிருஷ்ணமூர்த்திக்கு தெரிந்த சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி உள்ளார். அப்போது, அவர் தங்களை ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளனர். எனவே யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம், என்று கூறி உள்ளார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் 7 பேரையும் அலுவலகத்தில் உட்கார வைத்து பணம் ஒருவரிடம் கேட்டு உள்ளேன். விரைவில் கொண்டு வருவார்கள். அதை வாங்கி தங்களிடம் கொடுக்கிறேன் என்று கூறி அவர்களை சிறிது நேரம் காக்க வைத்து உள்ளார்.

7 பேர் கைது


பின்னர் இது குறித்து தில்லை நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இருந்த 7 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் பறிக்க வந்ததை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசாரை கண்டதும் பணம் பறிக்க வந்த கும்பலில் இருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story