பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை


பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை
x
தினத்தந்தி 25 Feb 2018 4:25 AM IST (Updated: 25 Feb 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

புதுச்சேரி,

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுவை வருகிறார். அவர் ஆரோவில் சர்வதேச நகரத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் மற்றும் லாஸ்பேட்டையில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்காக லாஸ்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் தங்கியிருந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று காலையும் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்திற்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி நாளை (அதாவது இன்று) காலை 9 மணியில் இருந்து 9.30-க்குள் சென்னையில் இருந்து புறப்பட்டு 10.30 மணியளவில் புதுவை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து அரவிந்தர் ஆசிரமத்திற்குச் செல்கின்றார். பின்னர் அங்கிருந்து ஆரோவில் சென்று பொன்விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின்னர் லாஸ்பேட்டை பொதுக்கூட்ட மேடைக்கு வந்து பொதுமக்களிடம் உரையாற்றுகின்றார். பொதுக்கூட்டம் மதியம் 12 மணிக்கு தொடங்கி விடும்.

பிரதமர் மோடி நேராக பொதுக்கூட்டத்திற்கு வந்த உடன் தனது உரையை தொடங்குவார். இந்த கூட்டம் பிற்பகல் 2½ மணிக்குள் நிறைவடையும். கூட்டத்தில் புதுவை மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் மகேஷ்கிரி எம்.பி. கலந்துகொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. அவர்கள் எளிதாக வந்து பிரதமரின் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். பா.ஜ.க. தொண்டர்கள் பொதுமக்களுக்கு தேவையான உதவுகளை செய்து வழிகாட்டுவர். புதுவை மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கேட்க வரும்படி அழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல். ஏ.க்கள் சங்கர், செல்வ கணபதி, துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story