பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை போட்டிகள்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை போட்டிகள்
x
தினத்தந்தி 25 Feb 2018 9:45 PM GMT (Updated: 25 Feb 2018 7:53 PM GMT)

உடுமலையில் அறிவியல் தினவிழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.

உடுமலை,

பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், கலிலியோ அறிவியல் கழகம் ஆகியவற்றின் சார்பில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில், உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியில் வினாடி-வினா, ஓவியம், பேச்சு, கட்டுரை ஆகிய போட்டிகள் நடந்தது. போட்டிகள் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ம் வகுப்புகள், 11 மற்றும் 12-ம் வகுப்புகள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பூரணி தலைமை தாங்கினார். தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் சங்க செயற்குழு உறுப்பினர் சசிக்குமார் வரவேற்று பேசினார். போட்டிகளை தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சக்கரபாணி தொடங்கிவைத்தார்.

இதனையொட்டி டெல்லி விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி வேங்கடேஸ்வரன், விஞ்ஞானி சுதாகர் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். முடிவில் ஆர்.டி.ஓ. அசோகன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், சதீஸ்குமார், பேராசிரியர் கண்டிமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதுபோல் தமிழ்நாடு அறிவியல் இயக்க உடுமலை கிளையின் சார்பில் நகராட்சி எக்ஸ்டன்சன் நடுநிலை பள்ளியில் 6,7,8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேசிய அறிவியல் தின விழாவையொட்டி கட்டுரை போட்டி, பேச்சு போட்டி ஆகியவை நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க உடுமலை கிளை தலைவர் ஹேனா ஷெர்லி தொடங்கிவைத்தார். இணைச்செயலாளர் மகேந்திரன், ஆசிரியை சுமத்ரா ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. முடிவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் செல்லத்துரை நன்றி கூறினார்.

Next Story