ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 91 ஜோடிகளுக்கு திருமணம் வைத்திலிங்கம் எம்.பி. நடத்தி வைத்தார்


ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 91 ஜோடிகளுக்கு திருமணம் வைத்திலிங்கம் எம்.பி. நடத்தி வைத்தார்
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 25 Feb 2018 9:05 PM GMT)

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 91 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை வைத்திலிங்கம் எம்.பி. நடத்தி வைத்தார்.

தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 91 ஜோடிகளுக்கு இலவச திருமணம் தஞ்சை திலகர் திடலில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் பாரதிமோகன், ரத்தினவேல், சந்திரகாசி, அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜ், குன்னம் ராமச்சந்திரன், ஜெயராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரசுராமன் எம்.பி. வரவேற்றார்.

விழாவில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப் பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டும். ஏழை, எளிய மக்கள் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அவருடைய பிறந்த நாளில், அவரது எண்ணங்களை ஈடேற்றும் வகையில் நாம் ஏழை, எளிய மக்களுக்கு இலவச திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம். ஜெயலலிதா எதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணினாரோ? அதை அவரது விசுவாசிகளும், உண்மை தொண்டர்களும் நிறைவேற்றி வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அவருடைய புகழ் நிலைத்திருக்கும் வகையில் நாம் பாடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் 91 ஜோடிகளுக்கும் கட்டில், பீரோ, மெத்தை, தலையணை, குத்துவிளக்கு, வீட்டு உபயோகப்பொருட்கள், மின்விசிறி உள்ளிட்ட 75 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் மணமக்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும், திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

விழாவில் முன்னாள் வாரிய தலைவர் ஆதிராஜாராம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, வக்கீல் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், சோழபுரம் அறிவழகன், காவேரி பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், தஞ்சை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இளைஞரணி தலைவர் வைத்திலிங்கம், காண்டிராக்டர் பிரசாத், தஞ்சை தெற்கு ஒன்றிய துணை செயலாளர் இளவரசி கலியமூர்த்தி, ஆம்பலாப்பட்டு வடக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புத்திசிகாமணி அப்பாங்கம், குளிச்சப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவள்ளி செல்லப்பா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் தஞ்சை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி நன்றி கூறினார்.

Next Story