விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் தகவல்


விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:15 AM IST (Updated: 27 Feb 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கடனை திரும்ப செலுத்திய விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று கலெக்டர் கதிரவன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 90 மனுக்களில் 70 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து உரிய விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அதற்கு பதில் அளித்து கலெக்டர் கதிரவன் பேசியதாவது:-

வங்கி கடன் பெற்று கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு உடனடியாக வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்கம்பங்கள் நிறுத்தப்பட்டு மின் இணைப்புகள் வழங்காமல் உள்ளவற்றிற்கு மின் உபகரணங்கள், மின் மாற்றிகள் கிடைக்க பெற்றவுடன் உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்படும்.

அதேபோல் மலைகிராமங்கள் மற்றும் கிராமங்களில் மின்விளக்குகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்டறிந்து உடனடியாக எல்.இ.டி. பல்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வசதியில்லாத இடங்களில் குடிநீர் இணைப்புகள் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் நலன் கருதி பண்ணை குட்டை அமைத்தல், உரக்குழி கொட்டகை அமைத்தல், மண்கரை அமைத்தல் மற்றும் கல்கரை அமைத்தல் பணிகளை தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் கண்ணன், வேளாண்மை துணை இணை இயக்குனர் (பொறுப்பு) கண்ணன், இந்தியன் வங்கி மேலாளர் பாஸ்கரன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், விவசாய சங்க நிர்வாகிகள் சென்னையாநாயுடு, லோகாபிராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story