தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிரான இந்திய மருத்துவ சங்க யாத்திரை ஈரோடு வந்தது


தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிரான இந்திய மருத்துவ சங்க யாத்திரை ஈரோடு வந்தது
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 27 Feb 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்திய மருத்துவ சங்க யாத்திரை ஈரோடு வந்தது.

ஈரோடு,

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதற்கு நாடு முழுவதும் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை ஈரோட்டிற்கு நேற்று முன்தினம் மாலை வந்தது. இதைத்தொடர்ந்து கோரிக்கை விளக்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க ஈரோடு கிளை தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை தாங்கினார். செயலாளர் சச்சிதானந்தம், மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்க முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் வினய் அகர்வால் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால், 6 மாத பயிற்சிக்கு பிறகு எம்.பி.பி.எஸ். படிக்காத டாக்டர்களும் அலோபதி சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த பயணத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று டாக்டர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறோம். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்திய மருத்துவ சங்க யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதம் 25-ந் தேதி யாத்திரை பயணம் முடிவடைந்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story