வறட்சி பாதிப்பு அடைந்த பகுதிகளில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்காதது ஏன்?, விவசாயிகள் ஆவேசம்


வறட்சி பாதிப்பு அடைந்த பகுதிகளில் பயிர் இழப்பீட்டு தொகை வழங்காதது ஏன்?, விவசாயிகள் ஆவேசம்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி பாதிப்பு அடைந்த பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்காதது ஏன் என குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பப்பட்டது.

விருதுநகர்,

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. வழக்கமாக கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் விவசாயத்துறை அதிகாரிகள் தலைமையில் தொடங்கியது. நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்ட பின் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொள்ளாதது ஏன் என விவசாயிகள் கேட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி ஆனந்தகுமார் கூட்ட அரங்கிற்கு வந்து கூட்டத்தை நடத்தினார்.

விவசாய சங்க தலைவர் விஜயமுருகன் பேசுகையில், மாவட்டம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் இழப்பீட்டு தொகை வழங்காதது ஏன் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இது பற்றி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் இதற்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுட்டிக்காட்டியும் எவ்வித பலனும் ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.

கண்மாய்களை சீரமைக்க வேண்டும் என்றும், வரத்துகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பல முறை கோரியும் நடவடிக்கை எடுக்க வில்லை என அவர் குறை கூறினார். வத்திராயிருப்பு விவசாயி செல்லச்சாமி என்பவரும் தங்கள் பகுதியில் கண்மாய்களை மராமத்து செய்யக் கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட காப்பீட்டு நிறுவன அதிகாரியிடம் மாவட்ட வருவாய் அதிகாரி ஆனந்தகுமார் இழப்பீட்டு தொகை ஏன் வழங்கப்படவில்லை என கேட்டார். இதனைத்தொடர்ந்து காப்பீட்டு அதிகாரி அளித்த பதிலில் திருப்தி அடையாத விவசாயிகள் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் அதிகாரிகள் அமர்ந்து இருந்த இடத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது கலெக்டர் சிவஞானம் கூட்ட அரங்கிற்கு வந்தார். இதனைத தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் தங்கள் இடத்தில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி பதில் அளித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கணபதி, சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த காளியப்பன் என்ற விவசாயி தான் தாட்கோ மூலம் இலவச மின் இணைப்பு கேட்டு மனு செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்த கூட்டத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என மண்எண்ணைய் கேனை காட்டி கூறினார். அங்கிருந்த போலீசார் அவரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்து அவரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story