புதுப்பொலிவு பெற்ற வெள்ளியணை ரெயில் நிலையம்


புதுப்பொலிவு பெற்ற வெள்ளியணை ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற்றது.

வெள்ளியணை,

கரூருடன் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கரூர்- திண்டுக்கல் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு 1988-ம் ஆண்டு முதல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையில் வெள்ளியணை, பாளையம், எரியோடு ஆகிய ஊர்களில் ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையங்களில் சில ரெயில்கள் நின்று செல்வதால் அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் தென்மண்டல ரெயில்வே பொது மேலாளர் இந்த பாதையையும், ரெயில் நிலையங்களையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் தற்போது பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

புதிய இருக்கைகள்

அதன்படி வெள்ளியணை ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழி ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக இருந்த பழைய தார் சாலையை புதிதாக போடப்பட்டு இரவிலும் சென்று வரும் வகையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ரெயில் நிலையமும், பணியாளர்கள் குடியிருப்பு வீடுகளும் மராமத்து பணிகள் செய்யப்பட்டு புதிதாக குடியிருப்பு வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கப்பட்டு தனித்தனி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் வைத்து, பழைய மின் இணைப்பு வயர்கள் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. ரெயில் நிலையத்தில் அதிகமான பயணிகள் அமரும் வகையில் புதிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பயணிகளின் நலன் கருதி ரெயில் வரும் நேரத்தை அறிவிப்பதற்கு புதியதாக ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது.

நின்று செல்ல வேண்டும்

ஆங்காங்கே அலங்கார பூந்தொட்டிகள் ரெயில் நிலைய பகுதியில் வைக்கப்பட்டும், அறிவிப்பு பலகைகள் புதியதாக எழுதப்பட்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் புதிய சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ரெயில் நிலையம் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு பயணிகளுக்கு பயன்படும் வகையில் இருந்தாலும் பயணிகள் குறைந்த அளவே இங்கு வந்து செல்கின்றனர். இதற்கு காரணம் காலை, மாலை வேலைகளில் இங்கு நின்று செல்லும் வகையில் ரெயில்கள் இயக்கப்படாமையே என்பதும், மேலும் கூடுதலாக தமிழக பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய ரெயில்கள் இப்பாதையில் இயக்கப்பட்டு அவை வெள்ளியணையில் நின்று செல்ல வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள், வர்த்தகர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story