பஸ் மூலமாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரே‌ஷன் அரிசி, கோதுமை பறிமுதல்


பஸ் மூலமாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரே‌ஷன் அரிசி, கோதுமை பறிமுதல்
x
தினத்தந்தி 1 March 2018 4:30 AM IST (Updated: 28 Feb 2018 10:44 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இருந்து பஸ் மூலமாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ரே‌ஷன் அரிசி, கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து ரே‌ஷன் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இவற்றை, அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு பஸ் மூலமாக ரே‌ஷன் அரிசி, கோதுமை கடத்தப்படுவதாக அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி பாண்டியம்மாள் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அனந்தகோபாலன், உதவியாளர் ரஞ்சித் ஆகியோர் ஜீப்பில் நாகர்கோவில் நகர பகுதியில் ரோந்து சென்றனர். வடசேரி கிருஷ்ணன்கோவில் சந்திப்பு அருகே வரும்போது சாலையின் ஓரமாக சிறு, சிறு மூடைகள் வைக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். உடனே ஜீப்பை நிறுத்திய அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தனர். அப்போது மூடைகளில் 250 கிலோ ரே‌ஷன் கோதுமை இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் வடசேரி பஸ் நிலையம் மற்றும் மீனாட்சிபுரம் பஸ்நிலையங்களில் ரோந்து சென்ற போது, நடைமேடையில் சிறு, சிறு மூடைகளில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கோதுமை மற்றும் ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு பஸ் மூலமாக கடத்துவதற்காக மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை அதிகாரிகள் நாகர்கோவிலில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து, கோணத்தில் உள்ள உணவு பொருள் பாதுகாப்பு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story