ஜெயேந்திரர் உடலை இருள்நீக்கி கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெயேந்திரர் உடலை இருள்நீக்கி கிராமத்தில் அடக்கம் செய்திட வேண்டும் என எங்கள் கிராம மக்கள் சார்பில் காஞ்சி சங்கர மட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்
கோட்டூர்,
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமம் ஜெயேந்திரர் சுவாமிகள் பிறந்த கிராமம் ஆகும். அவர் பிறந்த மண்ணில் நானும் பிறந்தவன். எங்கள் கிராம வளர்ச்சிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் நிறைவேற்றி உள்ளார். குறிப்பாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, மருத்துவமனை, பெண்களுக்கு தையல் பயிற்சி, கைத்தறி நூற்பு நிலையம், சாலை, கல்வி கூடம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.
காஞ்சிமடம் ஜாதி, மதங்களை கடந்து அனைவருக்கும் பொதுவானது என்பதை உணர்த்தியவர். தலித் குடியிருப்புகளுக்கு சென்று அவர்களின் உயர்வுக்கு வழிகாட்டியவர். காஞ்சி மடத்தின் பெருமைகளை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியவர். முதன் முதலில் பாபர் மசூதி பிரச்சினையில் இந்து, முஸ்லிம் மத தலைவர்களை ஓரிடத்தில் அழைத்து சமாதான முயற்சியை மேற்கொண்டவர். பன்முக தன்மை கொண்ட ஜெயேந்திரர் மறைவு எங்கள் கிராமத்திற்கும், காவிரி டெல்டாவிற்கும் பேரிழப்பு ஆகும். எங்கள் கிராமம், எங்கள் குடும்ப தலைவரை இழந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடல் இருள்நீக்கி கிராமத்தில் அடக்கம் செய்திட வேண்டும் என எங்கள் கிராம மக்கள் சார்பில் காஞ்சி சங்கர மட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.