10 ஆயிரம் ஏக்கரில் கருகும் பயிரை காப்பாற்ற வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும்


10 ஆயிரம் ஏக்கரில் கருகும் பயிரை காப்பாற்ற வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும்
x
தினத்தந்தி 1 March 2018 4:30 AM IST (Updated: 1 March 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

10 ஆயிரம் ஏக்கரில் கருகும் பயிரை காப்பாற்ற புள்ளம்பாடி வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் கலைச் செல்வன் தலைமையில் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிவேல், ரவி முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது வெட்டப்பட்ட புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது. இதனை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விடவேண்டும் என கேட்டுக்கொள்வது. லால்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள நால்ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் அந்த பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உப்பிலியபுரம் ஒன்றியம் புளியஞ்சோலையில் இருந்து வரும் அய்யாற்றில் எரகுடி அருகே தடுப்பணை அமைக்க வேண்டும். துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான செல்லிப்பாளையம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தொட்டியம் வட்டாரத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து வட்டார தலைவர்கள், நகர தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நல்ல சேகர் நன்றி கூறினார். 

Next Story