திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நஞ்சப்பா நகர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நஞ்சப்பா நகர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நஞ்சப்பா நகர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கஞ்சம்பாளையம் அருகே நஞ்சப்பாநகர் உள்ளது. இதில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படாமலே இருந்து வருகிறது. கொங்கு மெயின் ரோட்டில் இருந்து போயம்பாளையம், பூலுவப்பட்டி, வாவிபாளையம், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள் அதிகமாக நஞ்சப்பா நகர் பகுதியில் உள்ள ரோட்டையே பயன்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி பி.என்.ரோட்டிற்கு செல் பவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த பாதையையே பயன்படுத்துகின்றனர். ஆனால் நஞ்சப்பாநகரில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய சாக்கடை வசதி செய்து கொடுக்காததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பாய்கிறது. இந்த கழிவுநீர் சாலையில் உள்ள குழிகளில் தேங்கி கிடப்பதால் பனியன் நிறுவனத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லும் வாகனங்களால் சாலை மேலும் குண்டும், குழியுமாக ஆகி விடுகிறது. பல மாதங்களாக இதே நிலை நீடித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் கூறியதாவது:- பல மாதங்களாகவே இந்த சாலை மிகுந்த சேதமடைந்தே காணப்படுகிறது. பல முறை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்கவும், மின் விளக்குகள் இல்லாத பகுதியில் மின் விளக்குகளை பொருத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story