திருச்சி அரசு மருத்துவமனையில் கணினி கோளாறு: நோயாளிகள் அவதி


திருச்சி அரசு மருத்துவமனையில் கணினி கோளாறு:  நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 1 March 2018 11:05 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு மருத்துவமனையில் கணினிகள் கோளாறால் அனுமதி சீட்டு வழங்க முடியவில்லை. இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவ மனைக்கு திருச்சியை சேர்ந்த நோயாளிகள் மட்டுமின்றி கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் தினமும் வருகை தருகின்றனர். அவர்களின் நோய்களுக்கு ஏற்ப புற நோயாளி களாகவும், உள்நோயாளிகளாக தங்கியும் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் நோயாளியின் பெயர், முகவரி மற்றும் அவர் களின் நோய் விவரங்கள் முழுவதும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு கட்டிடம் உள்பட மருத்துவமனை முழுவதும் அனுமதி சீட்டு வழங்குமிடத்தில் உள்ள நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் கணினிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவைகள் இயங்கவில்லை.

இதன்காரணமாக நோயாளிகளின் அனுமதி சீட்டு கணினியில் பதிவு செய்ய முடியவில்லை. தாளில் எழுதி கொடுப்பதால் தாமதம் ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் நேற்று காலை நீண்ட வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்கி சென்றதால் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் இதனால் மருத்துவமனை பணிகளிலும் தாமதம் ஏற்பட்டது. ஆகவே, கணினியில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story