கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 11 ஆயிரத்து 472 பேர் எழுதினர்


கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 11 ஆயிரத்து 472 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 11 ஆயிரத்து 472 பேர் எழுதினர்.

கரூர்,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மொழிப்பாட முதல் தாள் தேர்வுடன் நேற்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 38 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக நேற்று காலையில் மாணவ- மாணவிகள் தேர்வு மையத்திற்கு வந்தனர். தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்பாக இறுதிகட்டமாக பாடங்களை மாணவ- மாணவிகள் தீவிரமாக படித்து கொண்டிருந்ததை காண முடிந்தது. கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஆங்காங்கே அமர்ந்தும், கூடியிருந்தும் பாடங்களை மும்முரமாக படித்தனர். தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன் மாணவிகளை தேர்வை நல்ல முறையில் எழுதும்படி ஆசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். மேலும் மாணவிகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கைகொடுத்து பரிமாறிக்கொண்டும், வெற்றியின் சின்னமான கை விரல்களை உயர்த்தி காட்டியும் சென்றனர்.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 15 நிமிடங்கள் விடைத்தாள்களை நிரப்பவும், வினாத்தாள்களை படிக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்பின் காலை 10.15 மணிக்கு தேர்வை எழுத தொடங்கினர். தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது. கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மொழி பாட முதல் தாள் தேர்வை மாணவ- மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 472 பேர் எழுதினர். தேர்வு எழுத 122 பேர் வரவில்லை. கண் பார்வையற்ற மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.

தேர்வு அறைக்குள் மாணவ- மாணவிகள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. மாணவ- மாணவிகள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையில் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் (பொறுப்பு) சூர்யபிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி, உதவி கலெக்டர் சரவணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ- மாணவிகள் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மொழிப்பாட 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முடிவடைகிறது.

Next Story