முறைகேட்டில் ஈடுபட்ட 11 பேர் பணியிடை நீக்கம்


முறைகேட்டில் ஈடுபட்ட 11 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 March 2018 4:00 AM IST (Updated: 3 March 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மாரீஸ்வரன் கூறினார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் மற்றும் விவசாயிகள் நேற்று வந்தனர். அவர்கள் வங்கியின் மேலாண் இயக்குனர் ரமணிதேவியை சந்தித்து பேசினர்.

அப்போது கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் திருவாரூர் கிளையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், அங்கு இருந்த கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மாரீஸ்வரனிடம், முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்தனர். இதேபோல கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமாரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இதில் திருவாரூர் கிளையில் கணினி மூலம் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ரூ.2½ கோடி வரை முறைகேடு செய்து உள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில், திருவாரூர் கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மாரீஸ்வரன் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

திருவாரூரில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அந்த வங்கியில் எவ்வளவு நிதியை முறைகேடு செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நவீன மின்னணு தொழில்நுட்பம் மூலம் நிதியை முறைகேடு செய்துள்ளதால், “சைபர் கிரைம்” பிரிவின் உதவியை நாடி இருக்கிறோம். முறைகேட்டில் ஈடுபட்ட 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story