துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.55½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒதுக்கீட்டு ஆணை


துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.55½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒதுக்கீட்டு ஆணை
x
தினத்தந்தி 4 March 2018 4:30 AM IST (Updated: 4 March 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

632 துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.55½ கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒதுக்கீட்டு ஆணையை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.

கரூர்,

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை மாற்றுவாரியம் சார்பில் கரூர் நகராட்சியில் பணிபுரியும் 632 துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.55 கோடியே 50 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு தோரணக்கல் பட்டி கிராமம் நேரு நகரில் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினர். தொடர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் பேசியதாவது:-

நகராட்சி பணியாளர்களின் நலனில் அக்கறைக்கொண்டு 1 நபருக்கு ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்தில் மத்திய, மாநில அரசு மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 640 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி பெற்று இன்று (நேற்று) 632 பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. இந்த 632 வீடுகளும் ரூ.55 கோடியே 50 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது. நகராட்சி பணியாளர்கள் தங்களது பங்களிப்பு நிதியை வழங்குவதற்கு சிரமம் ஏற்பட்டால் நகராட்சியின் மூலமாக பங்களிப்பு நிதி வழங்கப்பட்டு பணியாளர்களுக்கு ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யவும், ஒப்பந்த தொழிலாளர்கள் வங்கியின் மூலம் கடன் பெற்று வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கீடு ஆணை பெற்ற பயனாளிகள் தங்கள் வீடுகளை நல்ல முறையில் பராமரித்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு வீடு வழங்குவதற்கு கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் சூரிய சக்தியுடன் கூடிய பசுமைவீடுகள் கட்டிக்கொடுக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் தங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் சிரமப்பட்ட திருமாநிலையூர், செல்வநகர், ஒத்தக்கடை ஆகிய பகுதியினை சேர்ந்த மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களுக்கு செங்கல் இல்லாமல் முழுவதும் கான்கிரீட்டால் ஆன வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, குடிசை மாற்றுவாரிய நிர்வாக பொறியாளர் வெங்கடேசன், நகராட்சி ஆணையர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, உதவி நிர்வாக பொறியாளர் ஜெயராஜ், உதவி பொறியாளர் பாலாஜி, அ.தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், நிலவள வங்கி தலைவர் பேங்க் கே.நடராஜன், முன்னாள் நகராட்சி தலைவர் எம்.செல்வராஜ், நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story