சிதிலமடைந்த சிவன்-பெருமாள் கோவில்கள் புனரமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


சிதிலமடைந்த சிவன்-பெருமாள் கோவில்கள் புனரமைக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 March 2018 4:00 AM IST (Updated: 5 March 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பு பெற்ற சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனை புனரமைத்து, அதன் வரலாற்று பின்னணியை வெளிக்கொண்டு வந்து மக்கள் அறியும் வகையில் ஆவணப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே துறையூர் ரோட்டில் செஞ்சேரி எனும் கிராமம் உள்ளது. பச்சமலையிலிருந்து வரும் நீரை பெறும் வகையில், இந்த கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். முன்னொரு காலத்தில் இந்த பகுதி “தென்சேரி“ என அழைக்கப்பட்டதாகவும், நாளடைவில் பேச்சு வழக்கில் இது மருவி செஞ்சேரி என மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போதைய ஆட்சியாளர்களின் தென்பகுதியாக இருந்த இங்கு, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததால் தென்சேரி என அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கற்களால் ஆன சொக்கநாதசாமி எனும் சிவன் கோவிலும், அதற்கு அருகிலேயே வரதராஜபெருமாள் கோவிலும் உள்ளது.

இந்த கோவில்களின் பாதுகாப்பு சுவர்கள் சிறிதாக இருந்தாலும் கூட, கருங்கற்களில் எவ்வித பூச்சும் இல்லாமல் அப்படியே தூக்கி அடுக்கி வைக்கப்பட்டு காண்போரை கவரும் விதத்தில் உள்ளது. எனினும் நீண்ட நாட்களாக பராமரிப்பில் இல்லாததால் அந்த கற்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிதறி கிடக்கின்றன. இந்த சிவன், பெருமாள் கோவில்களின் பிரகாரங்களை பக்தர்கள் சுற்றி வர முடியாத வகையில் வேண்டாத செடிகள், முட்செடிகள் உள்ளிட்டவை சூழ்ந்து வளாகம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சிவன் கோவிலின் முன்புற பகுதியில் உள்ள வளாகத்தில் கோவில் பயன்பாட்டிற்காக வெட்டப்பட்ட பழங்கால கிணறு புதர்மண்டி பொலிவிழந்து காணப்படுகிறது. அந்த பெருமாள் கோவில் அருகே அமைக்கப்பட்ட சிறிய மண்டபம் ஒன்று இடிந்து சேதமடைந்து உள்ளது. அங்கு சாமி சிலைகள் எதுவும் இருந்ததா? அல்லது வேறு ஏதும் பயன்பாட்டிற்காக அந்த மண்டபம் இருந்ததா? என்பது தெரியவில்லை. மேலும் சிவன், பெருமாள் கோவில்களின் கருங்கல் மண்டபத்தின் மீதும் மரங்கள் வளர ஆரம்பித்து சிதிலமடைந்து காணப்படுகின்றன.

எனினும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் உள்ள இந்த கோவில்களில் பூஜை நடக்கின்றன. அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு தான் கோவிலுக்குள் செல்ல முடிகிறது. மேலும் சொக்கநாதசாமி, வரதராஜபெருமாள் கோவிலின் பழைய வரலாறு எதுவும் இல்லாததால் அதனை அறிந்து கொள்ள முடியதது பக்தர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது. எனவே தொல்லியல் துறையினர் இந்த சிதிலமடைந்த கோவில்களை ஆராய்ச்சி செய்து அதன் வரலாற்றை கண்டறிந்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஆவணப்படுத்த வேண்டும், அந்த கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து அங்குள்ள கிணற்றை தூர்வார வேண்டும், பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவரை பலப்படுத்த வேண்டும், தற்போது கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதையடுத்து அந்த கோவில்களுக்கு சொந்தமான நிலம் உள்ளிட்டவை அபகரிப்பில் ஏதும் இருக்கின்றனவா? என்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சேரியில் எழில்மிகு தோற்றத்துடன் இருந்த அந்த 2 கோவில்களின் அருகில் இருந்த கல்வெட்டுகளில் கிடைத்த ஆதாரங்கள் குறித்து அரும்பாவூரை சேர்ந்த பண்பாட்டு ஆய்வாளர் செல்வபாண்டியனிடம் கேட்ட போது அவர் கூறுகையில், அரியலூர் பாளையக்காரரான அரசு நிலையிட்ட கிருஷ்ணப்ப மழவராயர் கண்காணிப்பில் செஞ்சேரி இருந்திருப்பதாக தெரிகிறது. மேலும் இங்குள்ள கல்வெட்டுகள் 1593-ல் வைக்கப்பட்டிருக்கலாம். பாளையக்காரர்கள் வரிவசூல் செய்வது தொடர்பான விவரங்கள் பற்றியும், புதிதாக ஊருக்குள் குடியிருக்க வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தெலுங்கிலும் சில வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது கல்வெட்டுகளில் இருக்கின்றன. எனவே அவை கோவில்களின் வரலாறாக இருக்கலாம். வித்தியாசமான வடிவமைப்பில் அந்த 2 கோவில்களும் இருக்கின்றன. ஆனால் அதன் மதிப்பு தெரியாமல் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே இதனை புனரமைத்து பல்வேறு பகுதி மக்களும் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Next Story