ரூ.52 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் வழியாக போக்குவரத்து தொடங்கியது


ரூ.52 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் வழியாக போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 5 March 2018 4:30 AM IST (Updated: 5 March 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் ரூ.52 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் வழியாக போக்குவரத்து தொடங்கியது. முதல்கட்டமாக மோட்டார் சைக்கிள்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மேரீஸ்கார்னர்-சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை, நபார்ட, கிராம சாலைகள் திட்டம் மூலம் ரூ.52 கோடி மதிப்பில் 570 மீட்டர் நீளத்தில், 12 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை திறந்தால் விபத்து அடிக்கடி ஏற்படும் என்றும், பழைய வரைப்படத்தின் படி பாலம் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய மேம்பாலம் திறக்க ஐகோர்ட்டு மதுரை கிளையும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலத்தை திறப்பதற்காக பல்வேறு மாற்று ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறையினரும், போலீசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி மேரீஸ்கார்னர் பகுதியில் மேம்பாலம் இறக்கத்தில் சாலையின் மையப்பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு சிமெண்டால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. வண்டிக்காரத் தெரு பகுதியில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு சிமெண்டால் தடுப்புச்சுவர் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இருந்தாலும் தடுப்புச்சுவர் அகற்றப்படவில்லை. விபத்துகள் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாஞ்சிக்கோட்டை பகுதியில் இருந்து வரக்கூடிய பஸ்கள், லாரிகள் அனைத்தும் கல்லுக்குளம் வழியாக செல்லவும், தஞ்சையில் இருந்து நாஞ்சிக்கோட்டை பகுதியை நோக்கி செல்லக்கூடிய பஸ்கள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் மேம்பாலத்தின் கீழே உள்ள பாதையில் வந்து நாஞ்சிக்கோட்டை சாலைக்கு செல்லும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மேம்பாலத்தின் வழியாக நேற்று முதல் போக்குவரத்து தொடங்கியது.

முதல்கட்டமாக மோட்டார் சைக்கிள்கள் மட்டும் செல்ல நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் போடப்பட்டுள்ளது. அந்த தடுப்புகளை கொஞ்சம் அப்புறப்படுத்தி மோட்டார் சைக்கிள்கள் செல்வதற்கும், வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஏராளமானோர் மேம்பாலம் வழியாக சென்றனர்.

வண்டிக்கார தெரு பகுதியில் இருந்து மேம்பாலத்தின் வழியாக வரும் மோட்டார் சைக்கிள்களும், மேம்பாலம் இறக்கத்தின் வழியாக வரும் வாகனங்களும் மோதி விடாமல் இருப்பதற்காக மேரீஸ்கார்னர் பகுதியில் மேம்பாலம் இறக்கத்தில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி தற்போது வாகன போக்குவரத்திற்காக மேம்பாலம் எந்த அறிவிப்பும் இன்றி திறக்கப்பட்டுள்ளது.

சோதனையின் அடிப்படையில் தான் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. விபத்து ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு நடவடிக்கையாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் தான் மக்கள் பயன்பாட்டிற்காக மேம்பாலம் திறக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story