சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 March 2018 4:30 AM IST (Updated: 6 March 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருளை மலேசியாவுக்கு கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த சென்னையை சேர்ந்த முகமது லாபீர் (வயது 35) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் இனிப்புகள் வைக்கும் பெட்டியில் போதைப்பொருளை அடைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 8½ கிலோ எடை கொண்ட இந்த போதைப்பொருள் ரூ.40 லட்சம் மதிப்பு கொண்டதாகும். இதைத்தொடர்ந்து முகமது லாபீரை கைது செய்து சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

கைதான முகமது லாபீர், கொல்கத்தா வழியாக மலேசியாவிற்கு போதைப்பொருளை கடத்த முயன்றதாகவும், இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Next Story