புதுக்கோட்டை நகரில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் மனு


புதுக்கோட்டை நகரில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் மனு
x
தினத்தந்தி 6 March 2018 4:00 AM IST (Updated: 6 March 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை நகரில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்ககோரி தி.மு.க.வினர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனாமுகமது தலைமையில் அக்கட்சியினர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகர் பகுதியில் பிருந்தாவனத்தில் இருந்து மருத்துவ கல்லூரி வரை உள்ள நெடுஞ்சாலையும், அண்ணா சிலையில் இருந்து மார்க்கெட் வழியாக சிறைச்சாலை வரை உள்ள நெடுஞ்சாலையும், அண்ணா சிலையில் இருந்து மச்சுவாடி வரை உள்ள மாநில நெடுஞ்சாலையும், சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இச்சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறி இருந்தனர்.

அவர்கள் கொடுத்த மற்றொரு மனுவில், புதுக்கோட்டை நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கு ரூ.6 என இருந்ததை, தற்போது ரூ.200-ஆக உயர்த்தி உள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகம் வீட்டுவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவற்றை சரியாக செய்யாத நிலையில் வீட்டு வரியை மட்டும் பல மடங்கு உயர்த்தி உள்ளதால் மக்கள் சிரமத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதி மற்றும் கீழ ராஜவீதி சந்திப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதி மற்றும் கீழ ராஜவீதி சந்திப்பு பகுதியில் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முன்பு புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளியின் அருகே ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வேகத்தடை தற்போது அகற்றப்பட்டு உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

இலுப்பூர் தாலுகா பாக்குடியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கரந்தப்பட்டியை சேர்ந்த ஒருவர் பாக்குடியில் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கிணறு வெட்டி குளத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து உள்ளார். இதனால் அந்த குளத்தை நம்பியுள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். 

Next Story