6 மாதங்களுக்கு முன்பு கொள்ளை போன ஐம்பொன் அம்மன் சிலை புதரில் கிடந்தது


6 மாதங்களுக்கு முன்பு கொள்ளை போன ஐம்பொன் அம்மன் சிலை புதரில் கிடந்தது
x
தினத்தந்தி 6 March 2018 4:30 AM IST (Updated: 6 March 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளம் அருகே கோவிலில் இருந்து 6 மாதங்களுக்கு முன்பு கொள்ளை போன ஐம்பொன் அம்மன் சிலை புதரில் கிடந்தது. மீட்கப்பட்ட அந்த சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் தென் தாமரைகுளம் அருகே கோவில் விளையில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு தோட்டம் உள்ளது. அங்குள்ள புதரில் ஏதோ ஒரு பொருள் கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் கவனித்தனர்.

புதரை அகற்றி அவர்கள் பார்த்த போது, அம்மன் சிலை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிலை 1½ அடி உயரம் இருந்தது. இதையடுத்து சிலையை வெளியே எடுத்து சுத்தம் செய்தனர்.

புதருக்குள் கிடந்தது ஐம்பொன் சிலை என்பது தெரியவந்தது. இதுபற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் திரண்டு சென்று பார்த்தனர். தகவல் அறிந்ததும் தென்தாமரைகுளம் போலீசாரும் விரைந்து வந்தனர். முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த சிலை, 6 மாதங்களுக்கு முன்பு கோவிலில் இருந்து கொள்ளை போன இசக்கியம்மன் சிலை என்று தெரிய வந்தது. கோவில்விளையில் காட்டுப்பகுதியில் இசக்கியம்மன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில்தான் அந்த சிலை இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து இசக்கியம்மன் சிலையும், சில பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

கோவிலில் இருந்து தூக்கிச் சென்ற சிலையை வெளி இடங்களுக்கு கடத்திச் செல்வதற்காக கொள்ளையர்கள் அந்த புதரில் போட்டு மறைத்துள்ளனர். நீண்ட நாட்களாக அந்த சிலை புதரின் உள்ளேயே கிடந்ததால், அதன் மீது மண், தூசி படிந்து நிறம் மாறியுள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் எதேச்சையாக புதரை கவனித்த போது, அதில் ஏதோ வித்தியாசமான பொருள் கிடப்பதை அறிந்து எடுத்த போது, அந்த சிலை மீட்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கோவிலில் இருந்து சிலையை கொள்ளையடித்து புதருக்குள் போட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தொடர்ந்து தேடிவருகிறார்கள்.


Next Story