தஞ்சை அருகே அதிரடி சோதனை: கஞ்சா விற்ற தாய்-மகன் கைது


தஞ்சை அருகே அதிரடி சோதனை: கஞ்சா விற்ற தாய்-மகன் கைது
x
தினத்தந்தி 6 March 2018 3:45 AM IST (Updated: 6 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே கஞ்சா விற்ற தாய்-மகனை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் சாலியக்குளக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்றதாக அந்த வீட்டின் உரிமையாளர் சரோஜா(வயது45), அவருடைய மகன் ராஜீவ்காந்தி(19) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்தாலும் வெவ்வேறு வடிவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவது தெரியவந்துள்ளது. 5 கிலோ கஞ்சாவை ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி வந்து 1 கிலோ கஞ்சாவை ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதும், அதிக வருவாய் கிடைப்பதால் கஞ்சா விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவதும் தெரியவந்தது.

முன்பு சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். கஞ்சா விற்பனையை தடுப்பதுடன், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை கடத்தி வரும் கும்பலை பிடிக்கவும் போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story