குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 March 2018 4:15 AM IST (Updated: 6 March 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அடுத்துள்ள தடங்கம் ஊராட்சிக்குட்பட்ட பட்டாளம்மன் கோவில், குடியிருப்பு பகுதியில், தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்காக, பொக்லைன் எந்திரம் கொண்டு, குழிதோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில், 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த செல்போன் கோபுரம் அமைத்தால் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பட்டாளம்மன் கோவில் குடியிருப்புக்கு பகுதியில் அமைக்கப்படும் தனியார் செல்போன் கோபுரத்தால், சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோருக்கு பல்வேறு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும், செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story