காரைக்காலுக்கு காவிரி நீர் பெற உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


காரைக்காலுக்கு காவிரி நீர் பெற உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 March 2018 10:30 PM GMT (Updated: 6 March 2018 7:36 PM GMT)

காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. காவிரி நீரை பெற உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரியின் கடைமடை பகுதியான காரைக்கால் பகுதிக்கு 7 டி.எம்.சி. காவிரி நீரை வழங்க சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. காவரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரத்துக்குள் மத்திய அரசு அமைத்திட வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவும், காரைக்காலுக்கு வழங்கப்பட வேண்டிய 7 டி.எம்.சி. நீரை பெற்றிடவும் புதுச்சேரி அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் காரைக்காலுக்கு உரிய காவிரி நீரை பெற்றிட புதுவை ஆட்சியாளர்கள் உருப்படியான நடவடிக்கையினை எடுக்கவில்லை.

இதனால் காரைக்கால் பகுதியில் விவசாயம் 3-ல் 1 பங்காக சுருங்கியதோடு பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. கடன்பெற்று பயிர் செய்த விவசாயிகளும், விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த கூலி தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தநிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய மந்திரி நிதின்கட்காரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் புதுச்சேரி மற்றும் தமிழகத்துக்கு எதிரான அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக இது உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக உள்ள மத்திய மந்திரி நிதின்கட்காரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு கூட்டியுள்ள வாரிய பிரதிநிதிகள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை காலதாமதமின்றி சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி அமைக்க வலியுறுத்துவதோடு, காரைக்காலுக்கு கிடைக்கவேண்டிய 7 டி.எம்.சி. நீரை காலத்தோடு பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜாங்கம் கூறியுள்ளார்.

Next Story