சிறுவாணியில் இருந்து கோவைக்கு தினமும் 7½ கோடி லிட்டர் குடிநீர் சப்ளை


சிறுவாணியில் இருந்து கோவைக்கு தினமும் 7½ கோடி லிட்டர் குடிநீர் சப்ளை
x
தினத்தந்தி 6 March 2018 10:45 PM GMT (Updated: 6 March 2018 7:37 PM GMT)

சிறுவாணி அணையில் இருந்து கோவை நகருக்கு தினமும் 7½ கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

கோவை,

கோவை நகருக்கு சிறுவாணி, பில்லூர் அணைகளில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மொத்தம் 50 அடி கொள்ளளவுள்ள சிறுவாணியில் தற்போது 34¾ அடி நீர்மட்டம் உள்ளது. கோவை நகருக்கு தினமும் 7½ கோடி லிட்டர்(75 எம்.எல்.டி.) தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சிறுவாணியின் நீர்மட்டம் 7 செ.மீட்டர் வரை குறைந்து வருகிறது. நீரேற்றும் பகுதியில் உள்ள 3 வால்வுகள் தண்ணீருக்குள் உள்ளன. நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளதால் ஒரு வால்வு தண்ணீருக்கு வெளியே தெரிகிறது.

தற்போது இருக்கும் தண்ணீரை வைத்து வருகிற ஜூலை மாதம்வரை குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

ஆனால் நிலைமை தற்போது சிக்கலாகி உள்ளது. சிறுவாணி அணை கேரளா பகுதியில் உள்ளது. அணைபராமரிப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.5 கோடிமுதல் ரூ.10 கோடிவரை வழங்குகிறது. இந்த நிதியை பெற்றுக்கொள்ளும் கேரளா, தமிழக பகுதிகளில் உள்ள சாலைகளை பராமரிக்காமல், அணைக்கு அருகே கேரளா செல்லும் சாலைகளை பராமரித்து வருகிறது.

அணையின் மதகு சாவி கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உள்ளது. கேரள போலீசாரும், அணைப்பகுதியில் கேரள ஊழியர்களும் கேரளாவுக்கு சாதமாக நடந்து கொள்கிறார்கள்.

ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று, சிறுவாணியில் இருந்து கேரளா பகுதிக்கு வினாடிக்கு 60 கனஅடி தண்ணீரை திறந்துவிட்டனர். இருமாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர், சிறுவாணியின் அணை மதகுகள் மூடப்பட்டு ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறப்பதாக கேரள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் 24 மணிநேரமும் கண்காணிக்க முடிவதில்லை. மாலை நேரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் தமிழக அதிகாரிகள் கோவை பகுதிக்கு வந்துவிடுகிறார்கள். தமிழக அதிகாரிகள் இல்லாத நேரத்தை பார்த்து அணை மதகுகளை திறந்து கடந்தசில நாட்களாக கேரள பகுதிக்கு கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதாக புகார்கள் வந்துள்ளது.

கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், அது பவானி ஆற்றில் கலந்து பில்லூர் அணைக்கு வர வேண்டும். ஆனால் இடையில் தடுப்பணைகள் அமைத்து கேரளா பகுதிக்கு திருப்பி விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

சிறுவாணி பகுதியில் தற்போது நிலைமையை கண்காணிக்க 24 மணிநேரமும் தமிழக அதிகாரிகள், ஊழியர்கள் இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்றும், இல்லாவிட்டால் அவ்வப்போது கூடுதல் தண்ணீரை கேரள பகுதிக்கு திறந்துவிட்டு கோவை நகருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும் நிலை வரலாம் என்றும் கூறப்படுகிறது.

கோவையில் குடிநீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்துள்ள நிலையில், சிறுவாணியில் கேரள அதிகாரிகளின் அடாவடி மற்றும் கூடுதல் தண்ணீர் திறப்பு கோவை நகர மக்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. 

Next Story