கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது


கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது
x
தினத்தந்தி 7 March 2018 5:00 AM IST (Updated: 7 March 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாலாறு வெங்கடேசன், செயலாளர் அசோக் லோதா, தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் தஞ்சை புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து விவசாயிகளுடன் தென்சென்னை இணை கமி‌ஷனர் மகேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பி.ஆர்.பாண்டியன் உள்பட 12 பேர் மட்டும் கவர்னர் மாளிகைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கவர்னர் மாளிகைக்கு சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழுவினர், அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினர். அதனைத்தொடர்ந்து அக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு, கைது செய்யப்பட்ட விவசாயிகள் இருக்கும் சமுதாய நலக்கூடத்துக்கு வந்தனர்.  கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து கவர்னரை சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் பிரதமர் மோடி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்வோம். ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம்’’ என்றார்.

Next Story