எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:30 AM IST (Updated: 8 March 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது உருவபொம்மையை அவர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

தந்தை பெரியாரின் சிலைகள் உடைக்கப்படும் என, பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் வெளியிட்ட கருத்துக்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க., ம.தி.மு.க., இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவற்றை சேர்ந்தவர்கள் நேற்று பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், எச்.ராஜாவின் உருவம் பதித்த விளம்பர பதாகையை செருப்பால் அடித்து கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்பட போலீசார் சமாதானம் செய்தனர். இதை யடுத்து அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை தாங்கினார். திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பெரியார் சிலைகளை சேதப்படுத்த முயற்சித்தால் அவர்களது கையை உடைப்போம் என கோஷம் எழுப்பினர். மேலும் அவதூறு கருத்தை வெளியிட்ட எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென புதிய பஸ்நிலைய முன்புற பகுதியில் எச்.ராஜாவின் உருவபொம்மையை துடைப்பத்தால் அடித்து தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் உருவபொம்மையை எரித்தவர்களை எச்சரித்து விட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சாலையில் சிதறி கிடந்த எரிக்கப்பட்ட உருவபொம்மையின் வைக்கோலை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் அரியலூர் பஸ்நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தலைமையில், ம.தி.மு.க., திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு எச்.ராஜா உருவபொம்மை எரிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.

தா.பழூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில், எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன், தி.மு.க. தோழமை கட்சிகள் கலந்து கொண்டன. 

Next Story