எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் வீடியோ மூலம் ரஜினிகாந்த் பேச்சு


எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் வீடியோ மூலம் ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 7 March 2018 11:00 PM GMT (Updated: 7 March 2018 7:33 PM GMT)

எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் முன்னிலையில் வீடியோ மூலம் ரஜினிகாந்த் பேசினார்.

திருச்சி,

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே தனது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். தற்போது ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நேற்று காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் மாநில நிர்வாகி சுதாகர், மாநில பொதுச்செயலாளர் ராஜூ மகாலிங்கம் மற்றும் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் காலை 10 மணி அளவில் ரஜினிகாந்த் பேசிய வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றி ரஜினிகாந்த் பேசியதாவது:-

திருச்சி மாவட்ட மன்ற நிர்வாகிகளுக்கு வணக்கம். நாம் ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் எதையும் சாதிக்கலாம். நாம் எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இதில் சுயநலம் கிடையாது. பொதுநலம் தான். அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவோம். ஆண்டவன் கொடுத்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நான் ஏற்கனவே கூறியதை போல உங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தை முதலில் பார்த்து கொள்ளுங்கள். எந்த சண்டை, சச்சரவுகளுக்கும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்கள், கொடுக்க வேண்டும். ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருங்கள். உங்களுடன் ஆண்டவன் இருக்கிறான். நான் இருக்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். நமக்குள் சண்டை ஏற்படுத்தி பார்க்க எதிரிகள் முயற்சி செய்வார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். 

Next Story