கட்டிட காண்டிராக்டர் கொலையில் 2 பேர் கைது கேரளாவுக்கு தப்பிய மேலும் 2 பேருக்கு வலைவீச்சு


கட்டிட காண்டிராக்டர் கொலையில் 2 பேர் கைது கேரளாவுக்கு தப்பிய மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 March 2018 4:30 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே கட்டிட காண்டிராக்டர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கேரளாவுக்கு தப்பி சென்ற 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

கருங்கல்,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கப்பியறையை அடுத்த செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 46). கட்டிட காண்டிராக்டரான இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு நோக்கி வந்த போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.

இதில் பிரான்சிஸ் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரான்சிஸ்சை கொலை செய்தவர்கள் யாரென்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ்சின் பக்கத்து வீட்டுக்காரர் அமிர்தராஜ் (33)என்பவருடன் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது தெரியவந்தது.

மேலும் இதுபற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பிரான்சிஸ்சின் மனைவி மேரி செல்வி (41). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மேரி செல்வியும், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அமிர்தராஜ் என்பவருடைய மனைவி சுவிதாவும் நெருங்கிய தோழிகள்.

இந்தநிலையில் சுவிதா, அமிர்தராஜின் தொந்தரவு தாங்க முடியாமல் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் மேரி செல்விக்கு தெரியும் என்று அமிர்தராஜ் நினைத்தார். நெருங்கிய தோழி என்பதால் சுவிதா, மேரிசெல்வியிடம் அனைத்து விவரங்களையும் சொல்லியிருப்பார் என்று கருதிய அமிர்தராஜ், மேரி செல்வியிடம் சென்று மனைவி சுவிதாவை பற்றி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக பிரான்சிஸ்சுக்கும், அமிர்தராஜிக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இதற்கிடையே செல்லங்கோணம் பகுதியை சேர்ந்த அருள் (35) என்பவரிடம் அமிர்தராஜ் நடந்த விவரத்தை கூறி பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அருள், அமிர்தராஜின் நண்பரும் ஆவார். இதனையடுத்து அருள், பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.

பிரான்சிஸ் மகள்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் அருளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதுகுறித்து நேற்றுமுன்தினம் காலையில் பிரான்சிஸ் தனது மகளுடன் சென்று கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை தெரிந்து கொண்ட அருள் அன்று மதியமே மது குடித்து விட்டு பிரான்சிஸ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது, இன்றைய இரவுக்குள் உன்னை கொன்று விடுவேன் என்று பிரான்சிஸ்சிடம் மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பாக மறுபடியும் பிரான்சிஸ் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்தநிலையில் இரவில் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது பிரான்சிஸ்சை, அமிர்தராஜ், அருள், பாலூரை சேர்ந்த ஸ்டீபன்பால் (39), சுபி (35) ஆகிய 4 பேர் வழிமறித்து, அவர் மீது மிளகாய் பொடியை தூவியுள்ளனர். இதனால் பிரான்சிஸ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அந்த சமயத்தில் 4 பேரும் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி விட்டனர்.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமிர்தராஜ், ஸ்டீபன்பால் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அருள், சுபி ஆகிய 2 பேரும் கேரள மாநிலத்துக்கு சென்று தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story