காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை


காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 8 March 2018 4:30 AM IST (Updated: 8 March 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

சுருளி அருவி மலைப்பகுதியில் காதலனை கொலை செய்துவிட்டு, கல்லூரி மாணவியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

தேனி,

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவியில் இருந்து மலைப்பகுதி வழியாக கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் ஒற்றையடிப் பாதையில் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி வனக்காப்பாளர் தங்கராஜ் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் பிணமாக கிடந்தனர். இருவர் உடலும் அழுகிய நிலையில் கிடந்தது. பெண்ணின் உடல் உறுப்புகள் பல இடங்களில் சிதைக்கப்பட்டு இருந்தது.

விசாரணையில் பிணமாக கிடந்தது கோட்டூரை சேர்ந்த தங்கநதி மகன் எழில் முதல்வன் (வயது 21), தேனி பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி என்பதும், அவர்கள் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்.

எழில்முதல்வன் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு தேனி அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் அந்த மாணவி படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், மே 14-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் சுருளி வனப்பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும், மாணவி அணிந்து இருந்த 1½ பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது. இதனால், நகைக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனையில் இருவரும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும், இதில் மாணவி கொடூரமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள், அருகில் உள்ள மரத்தில் இருந்த கால் தடங்களை வைத்து இரட்டைக்கொலை தொடர்பாக கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளியான திவாகர் என்ற கட்டவெள்ளை (29) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மாணவியை கற்பழித்து, கொலை செய்ததையும், நகையை திருடிச் சென்று விற்றதையும் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் இந்த கொலை சம்பவத்தை, மே 14-ந்தேதி நிகழ்த்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை உத்தமபாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, எழில் முதல்வனின் தந்தை தங்கநதி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன்பேரில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில், சுமார் 67 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். சுமார் 1200 பக்க குற்றப்பத்திரிகையை உத்தமபாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக மதுரை மத்திய சிறையில் இருந்து திவாகர் என்ற கட்டவெள்ளையை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர். பகல் 12 மணியளவில் அவரை மாவட்ட செசன்சு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி செந்தில்குமரேசன் தெரிவித்தார். பின்னர், 2 மணிக்கு மீண்டும் கோர்ட்டு கூடியது.

கோர்ட்டு கூடியதும், அரசு தரப்பு வக்கீல்கள், ‘இது கொடூரமான சம்பவம். இந்த வழக்கில் கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’ என்று கூறினர். அப்போது, திவாகரை பார்த்து ‘திருந்தி வாழ ஆசைப்படுகிறாயா?’ என்று நீதிபதி கேட்டார். அதற்கு திவாகர், ‘இனிமேல் திருந்தி வாழ்வேன்’ என்றார்.

உடனே குறுக்கிட்ட அரசு வக்கீல்கள், ‘இவர் பல வழக்குகளில் தொடர்புடையவர். எனவே திருந்தி வாழ வாய்ப்பு கிடையாது. கொலை செய்யப்பட்ட இருவரும் இளம்வயதினர். அதனால் இவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து, தீர்ப்பை 4 மணிக்கு அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி, 4 மணிக்கு நீதிபதி செந்தில்குமரேசன் தீர்ப்பு கூறினார். அதில், ‘மாணவியை கற்பழித்து கொலை செய்ததற்காக திவாகர் என்ற கட்டவெள்ளைக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை), திருட்டு குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, எழில்முதல்வனை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார். தீர்ப்பை கேட்டதும், திவாகர் என்ற கட்டவெள்ளை தலையை குனிந்து கொண்டார். அப்போது, கோர்ட்டுக்கு வந்து இருந்த எழில் முதல்வனின் தந்தை தங்கநதி, அங்கிருந்த அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த தீர்ப்பு கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தேனி மாவட்டத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 
1 More update

Next Story