பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது 20,463 மாணவ-மாணவிகள் எழுதினர்


பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்கியது 20,463 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2018 4:15 AM IST (Updated: 8 March 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் 64 மையங்களில் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 20,463 மாணவ-மாணவிகள் எழுதினர்.

தர்மபுரி,

தமிழக அரசு, பிளஸ்-1 வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. இதன்படி தமிழகம் முழுவதும் பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் 64 மையங்களில் நேற்று பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வு தொடங்கி நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் 154 மேல் நிலைப்பள்ளிகளில் படிக்கும் 10,219 மாணவர்கள், 10,244 மாணவிகள் மற்றும் 13 தனித்தேர்வர்கள் என மொத்தம் 20,476 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 20,463 மாணவ-மாணவிகள் நேற்று தமிழ் முதல் தாள் தேர்வை எழுதினார்கள். 13 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்வு பணியில் 64 முதன்மை கண்காணிப்பாளர்களும், 64 துறை அலுவலர்களும், 24 வழித்தட அலுவலர்களும், 135 பறக்கும் படை அலுவலர்களும், 1,100 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளின் வசதிக்காக அவர்கள் சொல்வதை எழுத பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு பணியை மேற்கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,456 அலுவலர்கள் பிளஸ்-1 தேர்வு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்விற்காக 10 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வழித்தட அலுவலர்கள் மூலம் வினாத்தாள் கட்டுகள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. பிளஸ்-1 தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மேற்பார்வையில் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிளஸ்-1 தேர்வு நடைபெற்ற அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவசர தேவைக்கு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட பறக்கும் படை குழுவும், கல்வித் துறை அதிகாரிகள் கொண்ட பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.


Next Story