எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:30 AM IST (Updated: 8 March 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போன்று தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இணையதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் எச்.ராஜாவை கண்டித்து பல்வேறு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாநில மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தம்பிதுரை, பொன்.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணி, காவேரிப்பட்டணம் பேரூர் செயலாளர் பாபு, துணை அமைப்பாளர்கள் பரிதாநவாப், எஸ்.எச்.அமீன் மற்றும் திராவிடர் கழக மண்டல தலைவர் மதிமணியன், மாவட்ட தலைவர் துக்காராம், மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி எச்.ராஜாவின் உருவப்படங்களை எரித்தனர். தொடர்ந்து எச்.ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் திராவிடமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் அறிவரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொருளாளர் சரவணன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட பொறுப்பாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சசிகுமார், திராவிடர் கழக சென்னை உயர் நீதிமன்ற பயிற்சி வழக்கறிஞர் விவேகானந்தன், தர்மபுரி மண்டல இளைஞரணி செயலாளர் ஆறுமுகம், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் சீனிவாசன், அமைப்பாளர் செல்வம், துணை செயலாளர் ராசா, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பர்கூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலன், மாவட்ட பிரதிநிதி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது எச்.ராஜாவின் உருவப்படத்தை கிழித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஊத்தங்கரை 4 முனை சந்திப்பில் அனைத்து கட்சி சார்பில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் எக்கூர்செல்வம், சாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நகர செயலாளர் பாபுசிவக்குமார், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மாலதி நாராயணசாமி, திராவிடர் கழக பிரபு, ம.தி.மு.க. கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை செயலாளர் விஜயகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட துணை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான முருகன் கலந்துகொண்டு பேசினார். இதில் நகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, ஆனந்தைய்யா, கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது எச்.ராஜாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, தி.மு.க. மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் நந்தன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு திரிபுராவில் பா.ஜனதாவினரை கண்டித்து பேசினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு பா.ஜனதாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதேபோன்று பென்னாகரத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சத்தியநாதன் தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அன்பு, மக்கள் அதிகாரம் அமைப்பினர் நிர்வாகி கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 

Next Story