வேலூர் மாவட்டத்தில் 36 இடங்களில் எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு


வேலூர் மாவட்டத்தில் 36 இடங்களில் எச்.ராஜா உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 8 March 2018 5:37 AM IST (Updated: 8 March 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 36 இடங்களில் எச்.ராஜா உருவபொம்மை எரிக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் 36 இடங்களில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தெரிவித்த எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அதன்படி வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையின் முன்பு எச்.ராஜா உருவ பொம்மை நேற்று எரிக்கப்பட்டது. முன்னதாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் எம்.பி. முகமதுசகி, ஏழுமலை உள்பட ஏராளமான நிர்வாகிகள் மாநகர தலைமை தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக பெரியார் சிலையை நோக்கி நடந்து வந்தனர். அப்போது அவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் பெரியார் சிலை முன்பாக எச்.ராஜாவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், தீ வைத்தும் கொளுத்தினார்கள். பின்னர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தி.மு.க.வினர் வலியுறுத்தினார்கள்.

அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையிலான போலீசார் பெரியார் சிலை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் எரிந்து கொண்டிருந்த எச்.ராஜாவின் உருவ பொம்மை மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதேபோல் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக சாலை சந்திப்பு, காட்பாடி, ராணிப்பேட்டை, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், அரக்கோணம், வாலாஜா, சோளிங்கர் உள்பட வேலூர் மாவட்டத்தில் 36 இடங்களில் எச்.ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சில இடங்களில் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்தபோது தண்ணீர் ஊற்றி போலீசார் அணைக்க முயன்றனர். அப்போது தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

Next Story