நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் பா.ம.க.வுக்கு பாதிப்பில்லை டாக்டர் ராமதாஸ் பேச்சு


நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் பா.ம.க.வுக்கு பாதிப்பில்லை டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 9 March 2018 5:28 AM IST (Updated: 9 March 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

மேச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

மேச்சேரி,

நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் பா.ம.க.வுக்கு பாதிப்பில்லை என்று மேச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் தமிழக நிழல் நிதிநிலை அறிக்கை கொள்கை விளக்க மற்றும் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார்.

மாநில பொறுப்பாளர்கள் சதாசிவம், ராஜா, பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் பாஸ்கர், மேட்டூர் தொகுதி அமைப்பு செயலாளர் ராஜா, மாவட்ட பொறுப்பாளர்கள் ரகுபதி, கோவிந்தன், மேச்சேரி முன்னாள் நகர செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல் ஆட்சியை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் குறிப்பாக மம்தாபானர்ஜி மிகவும் எளிமையாக, திறமையாக ஆட்சி செய்கிறார். இன்றைய காலக்கட்டத்தில், பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டினர் என்றால் மிகவும் கேவலமாக பார்க்கின்றனர். ஓட்டுக்கு விலை போகிறவர்கள் என்று கூறுகின்றனர்.

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது பா.ம.க. தான். பா.ம.க.வினர் ஆட்சி செய்து இருந்தாலோ, சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருந்து இருந்தாலோ டெல்லிக்கு சென்று பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் செல்ல மாட்டோம் என அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி இருப்போம்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கப்படும். ஒரு துளி சாராயம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். தமிழக அரசியல் களத்திற்கு, கோடம்பாக்கம், ஹாலிவுட், பாலிவுட் என்று எங்கிருந்து சினிமா நடிகர்கள் வந்தாலும் எங்கள் கட்சிக்கு பாதிப்பில்லை. மக்கள் தெளிவாக உள்ளனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆட்சியில் அமர்ந்தால் தான் காவிரி நீர் கிடைக்கும் என்றும், ஒரு சொட்டு கூட சாராயம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவார் என்றும் மக்கள் நம்புகிறார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள 3 கோடி பெண்கள் பா.ம.க.வுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Next Story