விழுப்புரத்தில் ஆதிதிராவிட மக்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து போராட்டம்


விழுப்புரத்தில் ஆதிதிராவிட மக்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 10:15 PM GMT (Updated: 9 March 2018 1:01 AM GMT)

விழுப்புரத்தில் ஆதி திராவிட மக்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து நடந்த போராட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

விழுப்புரம், 

ஆதிதிராவிட மக்கள் மீதான தொடர் தாக்குதல்களை கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூரில் பள்ளி மாணவன் கொலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், ஆதிதிராவிட மக்களுக்கு சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திநேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சங்கரன், தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைத்தலைவர் ஆனந்தன், துணை பொதுச்செயலாளர்கள் சிவஞானம், பாரதிஅண்ணா, நிர்வாகிகள் கீதா, ராமசாமி, செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபகாலமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆதிதிராவிட மக்கள் தாக்கப்படுவது, படுகொலை செய்யப்படுவது, ஆதிதிராவிட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. வெள்ளம்புத்தூரில் 10 வயது சிறுவனை கொலை செய்து அவனது தாய்-சகோதரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுபோல் இதே கிராமத்தில் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த 3 சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் சம்பவங்களை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. கொலை வழக்கில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story