வீடு, நிறுவனங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


வீடு, நிறுவனங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
x
தினத்தந்தி 11 March 2018 4:30 AM IST (Updated: 11 March 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பேரூராட்சி பகுதியில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

மடத்துக்குளம்,

பொது சுகாதாரம், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் முக்கியமான பணி உள்ளாட்சி நிர்வாகங்களிடமே உள்ளது. அதன்படி, உள்ளாட்சி நிர்வாகங்களின் செலவினங்களை சமாளிப்பதற்காக, சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, கேளிக்கைவரி போன்றவை வசூல் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் 100 சதவீதம் வரிவசூல் இலக்கு நிர்ணயித்து வரிவசூல் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நீண்டகாலம் நிலுவை வைத்துள்ளவர்களின் வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்து வருகிறார்கள். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது.

மடத்துக்குளம் பேரூராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள், இதர வரியினங்களை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளவர்கள், உடனடியாக அவற்றை செலுத்தவேண்டும். இதுகுறித்து பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் வரிவசூலிப்பவர்கள் மூலம் வரிபாக்கி வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் வழங்கப்படுகிறது. அதன்பிறகும் நீண்ட நாட்களாக வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில வீடுகள் மற்றும் நிறுவனங்களில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரிபாக்கியை அபராத தொகையுடன் செலுத்தினால் மட்டுமே குடிநீர் இணைப்பு மீண்டும் வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story