துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்


துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 11 March 2018 4:30 AM IST (Updated: 11 March 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்லை,

நெல்லை சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் துரைபாண்டியன் என்ற உதயம் துரைப்பாண்டியன் (வயது 55). நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நாலந்துலா கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர் நெல்லை, சென்னை ஆகிய ஊர்களில் கொடுக்கல், வாங்கல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தற்போது சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நெல்லைக்கு வந்து இருந்தார்.

சி.என்.கிராமத்தில் தனது வீட்டில் தங்கி இருந்த துரைப்பாண்டியன் நேற்று முன்தினம் இரவு கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அதில் இருந்த மீதி தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்விவரம் வருமாறு:-

துரைப்பாண்டியன் தனது பாதுகாப்புக்காக உரிமம் பெற்று கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அந்த துப்பாக்கி, ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீனரக துப்பாக்கியாகும். அவர் எங்கு சென்றாலும் துப்பாக்கியையும் எடுத்துச் செல்வது வழக்கம். அப்படி துப்பாக்கியை எடுத்து வந்துதான் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தற்கொலைக்கு காரணம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதாவது, துரைப்பாண்டியனுக்கு சென்னையில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதாகவும், சென்னை சின்மயாநகரில் ரூ.15 கோடி மதிப்பில் பெரிய ஓட்டல் ஒன்றை கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

அவர் செய்து வந்த பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த ஓட்டலை கட்ட முடியாத சூழ்நிலை இருந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இருந்தாலும் அவருடைய மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாகவும், அதுதொடர்பாக குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனால் அவர் தற்கொலை செய்து இருக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். 

Next Story