கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,500 மானியம் சர்க்கரை ஆலை இயக்குனர் தகவல்


கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,500 மானியம் சர்க்கரை ஆலை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 11 March 2018 3:45 AM IST (Updated: 11 March 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பருசீவல் நாற்று நடவு செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4500 மானியம் வழங்கப்படுகிறது என்று சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் கீர்த்தி பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி,

கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் கரும்பு விவசாயிகள் குறைந்த செலவில் இரட்டிப்பு வருவாயை ஈட்டுவதற்கும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் நடப்பு பருவத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ரூ.68 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கரும்பு பருசீவல் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் 91 நிழல்வலைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு நிழல் வலைக்கூடத்திலிருந்து 25 ஏக்கர் வீதம் 2287.50 ஏக்கர் பரப்பில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டத்தின் கீழ் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சொட்டுநீர் நிறுவனங்களின் மூலம் வேளாண் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து உரிய அனுமதியுடன் வயல்களில் சொட்டு நீர்பாசனம் அமைத்து பருசீவல் நாற்று நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,500 மானியம் வழங்கப்படும். சாதாரண முறையில் விதைக்கரணைகள் மூலம் கரும்பு நடவு செய்வதற்கு அதிக செலவாகிறது. கூடுதலான வேலையாட்களும் தேவைப்படுகிறது.

அதிக ஊட்டம்

இந்நிலையில் பருசீவல் நாற்றுக்கள் எடுத்து கரும்பு நடவு செய்வதற்கு இலகுவாக இருப்பதால் இந்த புதிய நடவு முறை அனைவராலும் விரும்பப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட திடமான நாற்றுக்களை நடுவதால் கரும்பில் போக்கிடங்கள் இன்றி எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. கரணைகள் வைத்து நடவு செய்யும் முறையைவிட அதிக ஊட்டமாகவும், அதிக பக்க தூர்களுடனும் வளர்வதால் கூடுதலான மகசூல் எடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே கரும்பு விவசாயிகள் அனைவரும் நடப்பாண்டில் அமைக்கப்பட்டுள்ள 91 நிழல்வலைக்கூடங்களிலிருந்து பருசீவல் நாற்றுக்கள் பெற்று நடவு செய்து அரசின் மானியம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த மாத இறுதி வரை நடப்பிலுள்ள இந்த திட்டத்தின் கீழ் அரசின் மானியம் பெற ஆலையின் கோட்ட கரும்பு அலுவலகங்களையோ, வேளாண் அதிகாரிகளையோ அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story