வி‌ஷம் வைத்து கொல்லப்படும் மயில்–ஆடு, நாய்கள் வனத்துறையினர் விசாரணை


வி‌ஷம் வைத்து கொல்லப்படும் மயில்–ஆடு, நாய்கள் வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2018 4:00 AM IST (Updated: 11 March 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே மயில்,ஆடு, நாய்களை வி‌ஷம் வைத்து மர்ம நபர்கள் கொன்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை பகுதியில் அதிக மயில்கள் உள்ளன. இவை அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், பயிறு, உளுந்து ஆகியவற்றை தொடர்ந்து தின்று வந்தன. இந்த நிலையில் நேற்று உமாமகேஸ்வரபுரம் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான வயலின் அருகே உள்ள வயலில் 2 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இங்கு வி‌ஷம் கலந்த அரிசி கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் மயில்களை கொல்ல அரிசியில் வி‌ஷம் கலந்து வைத்தது தெரிய வந்தது. மேலும் அந்த பகுதியில் இந்த வி‌ஷம் கலந்த உணவை தின்ற நாய்கள், ஆடு, அணில்கள் இறந்தது தெரிய வந்தது.


இதை தொடர்ந்த அப்பகுதி மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மயில்களை மீட்டு, அந்த பகுதியில் குழித்தோண்டி புதைத்தனர். மேலும், வி‌ஷம் வைத்து மயில், ஆடு, நாய்களை கொன்று வரும் மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் 7 மயில்களும், 4 நாய்களும், 4 ஆடுகளும் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story