ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 2,175 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு


ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 2,175 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 March 2018 6:02 AM IST (Updated: 11 March 2018 6:02 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதிலும் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த ஆண்டு மட்டும் 2,175 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

காட்பாடி,

காட்பாடி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் குழந்தைகளை மீட்பது குறித்து வியாபாரிகள், தொண்டு நிறுவனத்தினர், ரெயில்வே ஊழியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் குடும்ப பிரச்சினை மற்றும் மன உளைச்சல் காரணமாக பெரும்பாலான குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ நினைத்து பல்வேறு இடங்களில் சுற்றி திரிகின்றனர். அவ்வாறு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் முதலில் ரெயில் நிலையங்களுக்குத் தான் வருகின்றனர். அப்படி வரும் குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 2 ஆயிரத்து 175 குழந்தைகள் ரெயில் நிலையங்களில் சுற்றித்திரிந்தபோது மீட்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம். இப்போது தொண்டு நிறுவனங்களுக்கு ரெயில்வே துறையின் மூலம் அடையாள அட்டை வழங்கியுள்ளோம். இப்பணியில் இணைந்து தனிமையில் சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு வழங்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story