மூலக்கொத்தளம் மயானத்தை அகற்ற கூடாது: ம.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம், வைகோ அறிவிப்பு


மூலக்கொத்தளம் மயானத்தை அகற்ற கூடாது: ம.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம், வைகோ அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2018 4:45 AM IST (Updated: 12 March 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

மூலக்கொத்தளம் மயானத்தை அகற்ற கூடாது என வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூலக்கொத்தளம் மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள் கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வருகின்றது. இந்தி எதிர்ப்பு முதல் போரில் சிறை சென்று மடிந்த வீரத்தியாகிகள் தாளமுத்து, நடராசன் இருவரின் நல்லுடல்களும் இங்குதான் எரிக்கப்பட்டன. தமிழ் மொழி உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய டாக்டர் தர்மாம்பாள் கல்லறையும் இங்குதான் உள்ளது. தமிழர்களின் தியாக வரலாற்றின் அடையாளச் சின்னம்தான் மூலக்கொத்தளம் சுடுகாடு.

இந்த மயானத்தைச் சுற்றிப் புதிதாக உருவாகி இருக்கின்ற அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர், இந்தச் சுடுகாட்டை அகற்றுவதற்காக, அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஏன் தமிழக அரசையும் சரிக்கட்டி குடியிருப்பு கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளனர். இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையேல் உணர்ச்சி கொந்தளிப்பான அறப்போரை சந்திக்க நேரிடும்.

மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றவிடாமல் தடுக்க, ம.தி.மு.க. சார்பில் 13-ந் தேதி (நாளை) காலை 10 மணி அளவில், கலெக்டர் அலுவலகம் அருகே அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story