கொல்லங்கோடு அருகே போதகர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை


கொல்லங்கோடு அருகே போதகர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 March 2018 3:45 AM IST (Updated: 13 March 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே போதகரை தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருங்கல்,

கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் ஜினு குமார் (வயது 35), கிறிஸ்தவ மத போதகர். இவர் நேற்று முன்தினம் பூவர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொல்லங்கோடு அருகே செருக்குழி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனில் அழைப்பு வந்தது. உடனே, அவர் மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

ஏற்கனவே அந்த பகுதியில் ஒரு வீட்டில் சைக்கிள் திருட்டு போயிருந்தது.  இதனால், அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நடமாடும் நபர்களை பொதுமக்கள் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், ஜினு குமார் சாலையோரம் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதே பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பவர் சந்தேகம் அடைந்தார். அவர், ஜினு குமாரிடம் சென்று, ‘திருட வந்துள்ளாயா...’ எனக்கேட்டு தகராறு செய்தார். ஜினு குமார் தான் திருட வரவில்லை எனக்கூறியும் கணேசன் நம்பவில்லை. மேலும், ஜினு குமாரை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து ஜினு குமார் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story