திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே அதிக வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திண்டுக்கல் நகர் முழுவதும் லேசான சாரல் மழை பெய்தது.
இதையடுத்து காலை 9.30 மணிக்கு மீண்டும் மழை பெய்தது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. காலை முதல் மழை பெய்ததால் மாணவ-மாணவிகள் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்றனர். இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
பலத்த மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் அவ்வப்போது சாரல், பலத்த மழை என மாறி மாறி பெய்து கொண்டே இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின்பு திண்டுக்கல் நகரில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.
இதேபோல் கொடைக்கானல் பகுதியில் நேற்று காலை 7 மணி முதல் சாரல் மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் அனைத்து இடங்களையும் முழுமையாக பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.
மேக கூட்டங்கள் தரையிறங்கியவாறு சென்றதால் எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். இந்த மழையால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் குறைந்துள்ளது. கொடைக்கானலில் பெய்த மழையினால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியது. பழனி பகுதியிலும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை, கே.சி.பட்டி, பெரியூர் உள்ளிட்ட கீழ்மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் கடுமையான குளிரும், உறைபனியும் நிலவியது. பகல் நேரத்தில் கடுமையான வெயில் காணப்பட்டது.
இதனால் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள காபி, மிளகு, வாழை, ஆரஞ்சு, அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்கள் வாடத்தொடங்கின. இதனால் விவசாயிகள் வேதனையில் இருந்தனர். இந்தநிலையில் இப்பகுதிகளில் நேற்று காலை 7 மணியில் இருந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல சின்னாளபட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் அவ்வப்போது பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story