வயலில் நடமாடிய முதலை வனத்துறையினர் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்


வயலில் நடமாடிய முதலை வனத்துறையினர் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
x
தினத்தந்தி 15 March 2018 4:15 AM IST (Updated: 15 March 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை அருகே வயலில் முதலை ஒன்று நடமாடியது. இந்த முதலையை வனத்துறையினர் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிக அளவில் வசிக்கின்றன. அணைக்கரை, நீலத்தநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக கொள்ளிடம் ஆறு பெரும்பாலும் வறண்டே கிடக்கிறது. இதனால் முதலைகள், ஆற்றில் இருந்து வெளியேறி கரைக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் ஒரு வயலில் நேற்று எந்திரம் மூலம் அறுவடை நடந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வயலில் முதலையின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவர் உடனடியாக எந்திரத்தை நிறுத்தி, வயலின் உரிமையாளரிடம், முதலை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ஆனந்தராஜ், கிராம நிர்வாக அதிகாரி ரவிக்கண்ணன் ஆகியோர் மூலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வன அலுவலர்கள் ஜான்சன், கென்னடி, சீனிவாசன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து முதலையை வலை மூலம் பிடித்தனர்.

பிடிபட்ட முதலை சுமார் 5 அடி நீளம் இருந்ததாக வன அலுவலர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட முதலையின் வாய் மற்றும் வயிற்று பகுதியில் கயிறு மூலம் கட்டிய வன அலுவலர்கள் உடனடியாக அனைக்கரை கொள்ளிடம் ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கு உள்ள மதகு பகுதியில் விட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

அத்தியூர் அருகே உள்ள நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லை. அதே நேரத்தில் வெயிலும் அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாகவும், ஆற்றில் தண்ணீர் இல்லாததாலும் முதலைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. ஆற்றில் இருந்து வெளியேறும் முதலைகளால் இப்பகுதி கிராம மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் எப்போதும் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டால் முதலைகள் ஆற்றில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

வயலில் முதலை நடமாடிய சம்பவத்தால் இன்னம்பூர், அத்தியூர் திருப்புறம்பியம், தேவனாஞ்சேரி, நீலத்தநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்தனர். 

Next Story