உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்: சிவசேனா
உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. #UPByPolls #ShivSena
மும்பை,
உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் 3 எம்.பி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது. உத்தர பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளும் பீகாரில் அராரியா மக்களவை தொகுதியும் காலியாக இருந்தன.
இந்த தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மூன்று தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது. கோரக்பூர், புல்பூர் தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சியும் அராரியா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளும் வெற்றி பெற்றன.
2019 -பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் இந்த தோல்வி அந்தக்கட்சியினரை கலக்கமடையச்செய்தது. இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சி மக்களவை தொகுதிகளில் அடைந்துள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கத்தை அளித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:-
“
இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். மாய உலகத்தில் இருந்து மக்கள் தற்போது வெளியே வந்துள்ளனர். ஏமாற்றப்பட்டுள்ளதாக மக்கள் தற்போது உணர தொடங்கியுள்ளனர். மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த புகைச்சலை மேலும் தீவிரமாக்க எதிர்கட்சிகளிடம் வலுவான தலைமை இல்லை.
மக்களவையில் பாரதீய ஜனதா 280 உறுப்பினர்கள் பலத்துடன் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் கூட இல்லை. பிற கட்சிகளையும் இணைத்தால் கூட, எதிர்க்கட்சிகளின் பலம் 150-ஐ தாண்டாது. 2014 ஆம் ஆண்டின் நிலவரம் இதுதான். 2019 ஆம் ஆண்டு இந்த நிலை கண்டிப்பாக மாறும். தன்னை ஒரு பெரிய திரையின் ஹீரோ போன்ற ஒரு பிம்பத்தை பிரதமர் மோடி உருவாக்கி வைத்துள்ளார். எனவே, பிரதமர் மோடியின் பிம்பத்துக்காக ராகுல்காந்தி கடுமையாக போராட வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story