திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேர்களை தயார் செய்யும் பணிகள் தீவிரம்


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேர்களை தயார் செய்யும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 16 March 2018 4:00 AM IST (Updated: 16 March 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேர்களை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீரங்கம்,

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி எட்டுத்திக்்கு கொடியேற்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் சுவாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும், மாலையில் வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

18-ந் தேதி இரவு தேரோட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வர உள்ளனர். மறுநாள் அதிகாலை சுவாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 4.30 மணியளவில் உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளுகின்றனர். காலை 6.30 மணியளவில் அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது.

திருவானைக்காவலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனியே 2 பெரிய தேர் உண்டு. அவை அடுத்தடுத்து வடம் பிடிக்கப்பட்டு வலம் வரும். முன்னதாக காலை 5 மணியளவில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர்கள் வலம் வந்து நிலை சேர்ந்தபின், பிரதான தேர்கள் வடம் பிடிக்கப்படும். தேரோட்டத்தையொட்டி 2 பெரிய தேர்களையும் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விபத்தை தவிர்க்கும் வகையில் தேரோட்டத்தின்போது தேரை உடனடியாக நிறுத்த வசதியாக அம்மன் தேருக்கு ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. உள்ளூர் வியாபாரிகள் தண்ணீர்பந்தல், அன்னதானம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்ட விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி ஆலோசனைப்படி கோவில் உதவி ஆணையர் ஜெயபிரியா, கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர். 

Next Story