கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியவர்


கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியவர்
x
தினத்தந்தி 16 March 2018 9:15 AM GMT (Updated: 16 March 2018 8:23 AM GMT)

நம் வீட்டிற்குள் கரப்பான் பூச்சி நுழைந்து விட்டால் என்ன செய்வோம். கரப்பான் பூச்சியை டப்புனு அடிச்சி, சட்டென வெளியில் எறிந்து விடுவோம்.

கரப்பான் பூச்சி பிரச்சினை, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லாண்ட் நகரில் வேறு விதமாக வெடித்திருக் கிறது. தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த கரைப்பான் பூச்சியை கொல்வதாக நினைத்து, வீட்டையே கொளுத்த முயன்றிருக்கிறார், ஆபெல் ஸ்மித்.

சம்பவத்தன்று குயின்ஸ் லாண்ட் நகர தீயணைப்பு படையினருக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. “சார், சீக்கிரம் வாங்க. என்னுடைய வீட்டில் குண்டு வெடிச்சிருச்சி” என்று அரைகுறையாக பேசி, தீயணைப்பு துறையை அலறவிட்டிருக்கிறார், ஆபெல். என்ன ஆச்சோ..? ஏது ஆச்சோ..? என பெரும் படையோடு ஆமெலின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறது தீயணைப்பு படை.

“வீட்டின் வெளித்தோற்றம் மாறுபட்டிருந்தது. வீட்டிற்குள் குண்டு வெடித்ததை போன்றே ஜன்னல் பகுதிகள் உடைந்திருந்தன. அதனால் வீட்டின் வெளியே, ஒரு குழுவை பாதுகாப்பிற்கு நிறுத்திவிட்டு, நாங்கள் 4 பேர் மட்டும் ஆபெலின் வீட்டிற்குள் நுழைந்தோம். வீட்டின் ஹால் பகுதியின் ஒரு மூலையை பார்த்து பயந்தப்படி, ஆபெல் உறைந்துபோய் இருந்தார். அந்த மூலையில் என்ன இருக்கிறது என்று எட்டிப்பார்த்தோம்.

ஒரு கரப்பான் பூச்சியும், தீப்பிடித்திருந்த சோபா செட்டுகளுமே இருந்தன. வீட்டின் சுவரில் கரும்புகை படிந்திருந்தது. என்ன நடந்தது என்ற விஷயத்தை சொன்னால் நீங்களே சிரித்துவிடுவீர்கள்” என்று பேசிய தீயணைப்பு வீரர் மாத்யூ, ஆபெல்லை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்ததோடு மீதி கதையை அவரிடமே கேட்டு தெரிந்துகொள்ள அறிவுறுத்தினார். ஆபெல்லும் பாவமாய் சொல்கிறார்:

 “கரப்பான் பூச்சி என்றாலே எனக்கு பயம். அப்படி இருக்க அன்று டி.வி. பார்த்துக்கொண்டிருக்கையில், டி.வி.யின் மேல் ஒரு கரப்பான் பூச்சி இருந்தது. அதை தொடாமல் விரட்ட எண்ணினேன். கரப்பான் பூச்சியை கொல்லும் ஸ்பிரேவை பயன்படுத்தினேன். பயனில்லை. அதனால் நெருப்பு ஸ்பிரேவை பயன்படுத்த எண்ணி, டி.வி. கண்ணாடியை சூடுபடுத்திவிட்டேன். அதனால் டி.வி.பெட்டி வெடித்ததோடு, என் கையில் இருந்த கரப்பான் பூச்சி ஸ்பிரேவும் வெடித்துவிட்டது” என்கிறார், அப்பாவி ஆபெல்.

இதில் என்ன கொடுமை என்றால், இவரை முதலுதவிக்காக சேர்த்திருக்கும் மருத்துவ மனையில் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருக்குமாம். அதனால் இன்னும் எதை எல்லாம் கொளுத்த போகிறாரோ..? என்று பயத்தில் உறைந்திருக்கிறார்கள், தீயணைப்பு வீரர்கள்.

Next Story