திருப்பூர் மாவட்டத்தில் 59 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன


திருப்பூர் மாவட்டத்தில் 59 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் 59 தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டன.

திருப்பூர், 

தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களிலும் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த சேவையை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதற்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி புதிய படங்களை திரையிடாமல் கடந்த 1-ந் தேதி முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய திரைப்படங்கள் திரையிடப்படாததால் பழைய திரைப்படங்கள் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் கூட்டம் குறைந்ததால் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தியேட்டர்கள் பராமரிப்பு செலவுக்கு கூட வருவாய் வரவில்லை. இந்தநிலையில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டபடி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். இருக்கைகள் குறைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். தியேட்டர்கள் லைசென்சை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். பராமரிப்பு கட்டணமாக குளிர்சாதன தியேட்டர்களுக்கு ரூ.5-ம், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களுக்கு ரூ.3-ம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரில் 36 தியேட்டர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 59 தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டர்களின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் ‘புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்பதாலும், தியேட்டர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர்கள் இயக்கப்படவில்லை’ என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறும்போது, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்கு மண்டலத்தில் 169 தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டன. இதன் மூலமாக வாரம் ஒன்றுக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றார்.

Next Story