7 நாட்களுக்கு பிறகு தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


7 நாட்களுக்கு பிறகு தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 18 March 2018 4:00 AM IST (Updated: 17 March 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்ட மீனவர்கள் 7 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், காரங்குடா, கழுமங்குடா, ராவுத்தன்வயல், மந்திரிபட்டினம், கணேசபுரம் உள்பட 32–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 4 ஆயிரம் நாட்டுப்படகுகள், 300 விசைப்படகுகள் மூலமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களை, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதன் காரணமாக கடந்த 7 நாட்களாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.


குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் பலத்த காற்று வீசவில்லை என்றும், ராட்சத அலைகள் இல்லை என்றும் மீன்பிடிக்க ஏற்ற வானிலை நிலவியதாகவும் மீனவர்கள் கூறி வந்தனர். மேலும் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர்களுக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.


Next Story